அரச சிற்றூழியர்கள் நியமனம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் கூறுவது உண்மைதான். மின்சாரசபைக்கு சிங்கள ஊழியர்களை நியமித்தமை பற்றி பேராசிரியர் கூறியிருந்தார். அந்த நியமனம் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்ட 51 நாள்’களில் நடைபெற்றது.
சிங்கள அரசியல் வாதிகள் தேர்தலுக்காக – தங்களுடைய தேர்தல் அரசியலுக்காக இவ்வாறான செயற்பாட்டை வழங்குவது சகஜம். ஆனால், நாம் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். வாகன சாரதிகள் 16 பேரை சிங்கள இனத்தைச் சார்ந்தோரை நியமித்தார்கள். நாங்கள் அதற்கு ஆட்சேபித்தோம். பின்னர் அவர்கள் வடக்கிலிருந்து மீளப்பெறப்பட்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகின்றபோது குறிப்பிட்டார், தேங்காய் விலை எகிறியமைக்கான காரணம் தேங்காய் பிடுங்க ஆள் இல்லை என்பதாலே! ஏனெனில் எல்லாரையும் நிற்றூழியர் நியமனம் வழங்கி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டார்கள் என்று. இந்த நியமனப் பிரச்சினை இங்கும் இருக்கின்றது.
ஆகையால், நாங்கள் அரசாங்கத்துக்கு மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம் சிற்றூழியர்களை நியமிக்கும்போது அந்தந்த மாவட்டத்திலேயே நியமிக்கவேண்டும் என்று. மொழியும் ஒரு பிரச்சினையாக உள்ளது. அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனாலும் நாங்கள் கண்ணில் எண்ணெயை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும் – என்றார்.

