சுவர் எது? சித்திரம் எது? அன்றாடப் பிரச்சினை சுவரா? அல்லது அடிப்படைப் பிரச்சினை சுவரா? என்று பேராசிரியர் க.கந்தசாமி கேட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் பேச்சாளருமாகிய எம்.ஏ..சுமந்திரன் விளக்கமளித்தார்.
நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் பேராசிரியர் க.கந்தசாமி தொடுத்த வினாவுக்கு, சுமந்திரன் வழங்கிய பதில் வருமாறு:-
1970 ஆம் ஆண்டுகளில் மொழிவாரியாகத் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டபோது நாங்கள் அதை எதிர்த்தோம். இளைஞர்கள் அரசியலில் நேரடியாகப் புகுவதற்கு ஓர் உடனடிக் காரணியாக அது இருந்தது என்றாலும் மிகையாகாது. கூடுதலான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டனர். அப்படியான சூழ்நிலையில் பெற்றோர் தமது காணிகளை விற்றோ அல்லது அடகுவைத்தோ இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார்கள். அந்தநிலைதான் எமக்கு – ஆயுதப்போராட்டத்துக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது. அந்த வேளையில் எங்களுடைய நிலைப்பாடு எப்படியிருந்தது?
எங்களுடைய அடிப்படை அரசியல் உருத்து கொடுக்கப்படவேண்டும். அது நிலைநாட்டப்படவேண்டும். விசேடமாக 1982 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு இயற்றப்பட்டதற்குப் பிறகு – தந்தை செல்வநாயகம் தன்னுடைய காங்கேசன்துறைத் தொகுதி ஆசனத்தை இராஜினாமாச்செய்தார். அப்படியான ஒரு நிலைப்பாடு இருந்தது. நாங்கள் எங்களுடைய உரிமைகளுக்காக எதையும் கொடுக்கத் தயார். மிகத் தெளிவாக அரசியல் உருத்து எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டால்தான் இந்த நாட்டிலே நாங்கள் வளமாக வாழமுடியும். அரசியல் உருத்து என்கின்ற சுவர் இருந்தால்தான் – அது கட்டப்பட்டால்தான் – எங்களுக்கான வாழ்க்கைச் சித்திரத்தை நாம் வரைய முடியும் என்ற மிகத் தெட்டத் தெளிவான நிலைப்பாடு இருந்தது.
இன்றைக்கு அதே விடயங்களை நாங்கள் எடுத்துப் பார்த்தால், தங்களுடைய இனவிகிதாசாரத்தைவிடக் கூடுதலான தமிழர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள் என்பதால்தான் மொழிரீதியான தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு நாடு பூராகவும் ஒரே விகிதாசாரத்தை வைத்துத் தெரிவுசெய்கின்றபோது எங்களுடைய இன விகிதாசாரத்தை விட மிகக் குறைந்த அளவிலேதான் நாங்கள் உள்நுழைகின்ற ஒரு சூழ்நிலைக்கு வந்திருக்கின்றோம்.
எங்களுக்கு இன்றைக்கு வருகின்ற அழுத்தம், இனவிகிதாசாரத்தைக் கேளுங்கள் என்று கேட்கின்றார்கள். இனவிகிதாசாரத்தின் அளவிலாவது உள்நுழையவேண்டும் என்று கேட்கின்றார்கள். எதை நாங்கள் மூர்க்கமாக எதிர்த்தோமோ? எதற்காக எங்களுடைய இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்களோ? அதையே திரும்பக் கொண்டுவாருங்கள் – அதையாவது கொண்டுவாருங்கள் என்று கேட்கின்ற நிலைப்பாட்டுக்கு இன்றைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.
இலங்கை சட்டக் கல்லூரிக்குத் தமிழ் மாணவர்கள் எடுபடமுடியாத நிலைமை இருந்தது. ஒரு மாணவர் அல்லது இரண்டு மாணவர்தான் எடுபடுகின்ற நிலைமை இருந்தது. இதுதொடர்பில் நாங்கள் பேசி பின்னர் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டதன் பின்னர்தான் மாணவர்கள் எடுபட்டார்கள். இன்றைக்கு எங்களது இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலாவது உள்நுழையவேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருக்கின்றது.
ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் இந்த விடயத்தைக் கேட்டு வழக்குத் தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த யோகராஜன் என்னிடம் வந்தார். நான் மறுத்துவிட்டேன். இதற்காகத்தானே நாங்கள் போராட்டங்களை மேற்கொண்டோம் என்றேன். எனது உள் உணர்வு அதை ஏற்க மறுத்தது. அவர் எனக்கு புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டினார். இப்ப அது எமக்குத் தேவையாக இருக்கின்றது. உள்ளீர்க்கின்றபோது இன விகிதாசாரத்தையும் பதவியுயர்வின்போது அது தேவையற்றும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள். அது தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வந்திருக்கின்றது. அது தற்போது செயலிழந்துள்ளது. அந்தச் சுற்றறிக்கையை மீளக் கொண்டுவரவேண்டும் என்று சொல்லி யோகராஜன் என்னிடத்தில் கேட்டிருந்தார். நான் அந்த வழக்கை ஏற்கவில்லை. ஏனென்றால் எங்களுடைய காலாகாலமாக இருந்துவந்த அந்த உணர்வு என்னை எடுக்க விடவில்லை.
ஆனால், இன்றைக்கு போகுமிடமெல்லாம் எங்களுடைய இளைஞர்கள் எங்களிடம் கேட்பது இன விகிதாசார அடிப்படையிலாவது கேளுங்கள். அதையாவது உறுதிசெய்யுங்கள் என்று கேட்கின்றார்கள்.
ஆகவே, நிலைமை வெகுவாக மாறியிருக்கின்றது. கிறிஸ்தவ மதகுரு என்னிடத்தில் ஒரு கேள்வி கேட்டார் ”ஏன் இப்ப எங்களைச் சந்திக்க வந்திருக்கின்றீர்கள் என்று?” அவர் கேள்வியைக் கேட்டுவிட்டு சென்றுவிட்டார் இருந்திருப்பாராயின் நன்றாக இருக்கும். நான் இப்ப மட்டுமல்ல, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பல மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றேன். இளைஞர்கள், யுவதிகள் தொடர்பில் ஆய்வைக்கூட நடத்தியிருக்கின்றேன். 10 இளைஞர்களைச் சந்தித்தால் அதில் 9 பேர் வேலையற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடத்தில் தொடர்ந்து என்ன செய்ய எண்ணியுள்ளீர்கள் என்றால், அவர்கள் வழங்கும் பதில், ”நாங்கள் வெளிநாடு செல்ல இருக்கின்றோம்” என்பதே! ஏற்கனவே வெளிநாடு பலர் சென்றமையால் எமது இனப் பரம்பல் குறைவடைந்துவிட்டது. மிகுதி இருப்பவர்களும் சென்றால் சுவர் எங்கே? சுவரே இல்லாமல் போய்விடும். அரசியல் உரிமை ஒன்றைப் பெறுவதற்கு மக்கள் – ஆட்பலம் இல்லாமல் போய்விடும். ஆகவே இன்று நிலைமை மாறுகின்றது. நாங்கள் அன்று சுவர் என்று சொன்ன விடயம் இன்று சித்திரமாக மாறுகின்றதா என்ற ஏக்கம் வருகின்றது. – என்றார்.

