யாழ்ப்பாணம், பலாலி விமானநிலைய அபிவிருத்திப் பணிகள் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இலங்கை வான் படையினர் இந்தப் பணி களை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்து பலாலியிலிருந்து தமிழகத்துக்கான விமான சேவைகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் அதற்கான பணிகளை முன்னெடுத்திருந்தது. ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியை அடுத்து இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தலைமை அமைச்சராக மீண்டும் பதவியேற்றதைத் தொடர்ந்து பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டன.
அந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற அமைச்சால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

