முப்பது வருடமாக எமது நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, அந்தப் பிரதேசத்தின் கல்வி நிலமைகள் அடிமட்டத்திற்குச் சென்றதையும் நாம் அறிவோம். 40வருடங்களுக்கு முன்னர், உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் தமிழ்மக்களே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;
30வருடமாக எமது நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, அந்தப் பிரதேசத்தின் கல்வி நிலமைகள் அடிமட்டத்திற்குச் சென்றதையும் நாம் அறிவோம். 40வருடங்களுக்கு முன்னர், உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் தமிழ்மக்களே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள் 450பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று தெரிவு செய்யப்பட்ட 30மாணவர்களும் சிறந்த உயர் அதிகாரிகளாகவும், வைத்தியர்களாகவும் வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.
சிறந்த எதிர்காலத்தை அடைவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் ஏன் தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகின்றார்கள் எனசிலர்நினைக்கக்கூடும். இராணவத்தினராகிய நாம், இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும், நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லவும், பல வேலைத்திட்டங்களை நடத்தி வருகின்றோம்.
இந்த மாணவர்கள் சிறந்த தலைவர்களாக வாழும்போது, கடந்த காலத்தில் எமது நாட்டில் நடைபெற்ற கொடிய சம்பவங்கள் நடைபெறாது என நம்புகின்றோம்.
மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தினர் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்க தயாராக இருக்கின்றோம்.
சிங்கள, தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி எமது நாடு அழகாகவும், எதிர்காலத்தில், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு, ஒருவர் ஒருவரின் மதத்தை மதிப்பதற்கும், இன்னொரு இனத்தை, இன்னொரு இனம் மதிக்க வேண்டுமென்பதற்காகவும், இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

