நெடுங்கேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங் குளம் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைக்கு தேவையானளவு நீரை சேமிக்கும் வகையில் இரகசியமாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தும் வகையில் காடுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணிப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்துக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர், குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலுவும் தெரிவிக்கையில் –
குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று அவதானித்த தகவல்களின் அடிப்படையில் பூரண அறிக்கை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அதனை கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்து மேலதிக நடடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில், நெடுங்கேணிப் பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகின்ற காட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சர்சமனங்குளம் புனரமைக்கப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய ஊற்றுக்குளம் போன்ற பிரதேசங்கள் இரகியமான முறையில் சுத்திகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கச்சர்சமனங் குளத்தில் சேகரிக்கப்படுகின்ற நீரை பயன்படுத்தி சுமார் 25 ஏக்கர் வரையில் பயிர் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுளளதாக குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்ற வவுனியா மாவட்ட கமநலத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளும் வகையில், இரண்டு வருடங்களுக்கு அதிகமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ள கச்சர்சமனங்குளம் வவுனியா மாவட்ட கமநல திணைக்களத்தில் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்றது.
அதேபோன்று குறித்த பிரதேசத்தை அண்டிய காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டு காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், நிர்வாக ஒழுங்குகளை கண்டுகொள்ளாமல் அனுராதபுரம் கமநல திணைக்களத்தினால் குறித்த குளம் புனரமைக்கப்பட்டுள்ளதோடு வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியின்றி காணிகள் பகிரப்பட்டு பயிர்ச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலையில், 83 கலவரத்தினை தொடர்ந்து மணலாறு வவுனியா எல்லை பிரதேசங்களில் நிலவிய பதற்ற நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்தமையின் காரணமாகவே அவை பற்றை காடுகளாக மாற்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

