திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் சிலர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கு சென்ற கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் அச்சமடைந்த மூவர் கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் கடலில் குதித்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமல் போன இருவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டதால் அதிலிருந்து கடற்படை நேற்றிரவு விலகிக்கொண்டது.
அத்தோடு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் அங்கிருந்து சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில, தற்போது விசேட அதிரடிப்படையினர் அங்கு தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேடுதல் நடவடிக்கையில் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பொதுமக்களின் கல்வீச்சில் காயமடைந்த 12 கடற்படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.