இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படின் அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இராணுவ தளமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக அமெரிக்க தூதரகமும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் அமெரிக்க இராணுவ முகாமை கிழக்கில் திருகோணமலையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் உண்மை தன்மை இருப்பின், அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே இது தொடர்பான முழுமையான தெளிவுபடுத்தல் அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

