அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இவ்வாறானதொரு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவரும், மோசமான போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டவரும் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

