தலைமன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 120 வீடுகள் கொண்ட “செய்க் சாயிட் சிட்டி” யைக் குறிக்கும் பெயர்ப் பலகை தனி அரபு மொழியில் மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு விசனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டுபாய் நாட்டு இளவரசரின் தனிப்பட்ட நிதி உதவியினால் அமைக்கப்பட்ட இந்த கிராமம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனின் வேண்டுகொளின் பேரில் அமைக்கப்பட்ட இக்கிராமத்துக்கு நிதி உதவி வழங்கியவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் சகல வசதிகளும் கொண்ட முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றும் 120 வீடுகளும் காணப்படுகின்றன. இந்த வீடுகள் மன்னாரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களுக்கு மாத்திரம் மீள்குடியேறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தின் திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப் பலகை அரபு மொழியில் மாத்திரம் காணப்படுவதாகவும், கிராமத்தில் நுழைவாயிலில் உள்ள பிரதான பெயர்ப் பலகை மாத்திரம் மூன்று மொழிகளிலும் அமையப் பெற்றுள்ளதாகவும் இன்றைய சகோதார மொழி தேசிய நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் அரபிகளின் உதவியினால் முஸ்லிம் கொலனிகள் அமைக்கப்படுவதாக இனவாத அமைப்புக்களினால் குற்றம்சாட்டப்பட்டு வந்தன. அந்தக் குற்றச்சாட்டுக்களின் சாயல்களே இந்த விசனங்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து முகாம்களில் பல்லாண்டு காலம் சிரமங்களுடன் வாழும் மக்களுக்கு வெளிநாட்டு தனவந்தர்கள் உதவ முன்வரும் போது, நாட்டு மக்கள் சிலரின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படுகின்றது என மனமகிழ்வது பெருந்தன்மையாகும்.
இதேவேளை, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் விமர்ஷனங்கள் ஏற்படாத வண்ணம் செயற்படுவது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு என்பது பொதுவாக சிந்திக்கின்ற பலரின் அபிப்பிராயமாகும்.