அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்பொழிவு காரணமாக 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட இடங்கள் பனியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு பனி மழை போன்று பெய்து வருகிறது. இதனால் பாதி அமெரிக்கா வெள்ளை மேகங்கள் போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றது. தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது.
மேற்கு மிசோரி மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதியில் 41 செ.மீ. அளவுக்கு பனி கொட்டிக்கிடக்கிறது. கிழக்கு பகுதியில் உள்ள கன்சாஸ் மற்றும் ஆர்கன் சாசில் 15 செ.மீ. அளவுக்கும், வாஷிங்டன் டி.சி.யில் 10 செ.மீ. பனியும் உறைந்து உள்ளது.
இதன் காரணமாக அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை.
எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றது. கடும் பனி மூட்டம் காரணமாக அமெரிக்காவில் ஏராளமான விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாயுள்ளது. கடும் பனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.