7 வயது 11 மாதங்கள் ஆன மும்பை சிறுமி ஸோயா, இளம் வயதில் எடைக் குறைப்பு சிகிச்சைக்கு ஆளான முதல் நபர். 39.6 கிலோ எடை இருந்த ஸோயாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று இரண்டாவது முறையாக எடைக் குறைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளைச் செய்து வருகிறார் ஸோயாவின் தந்தை யூசுஃப். தாய் இல்லத்தரசி. சாண்டாக்ரூஸ் அருகிலுள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் ஸோயாவுக்கு முன்னதாக ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 18 மாதத்தில் குழந்தை இறந்தபோது 22 கிலோ இருந்துள்ளது. மரபியல் ரீதியான கோளாறு காரணமாகவே எடை கூடியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்ற பிரச்சினை ஸோயாவுக்கும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பிறந்து 11 மாதங்களே ஆன நிலையில், 19 கிலோ எடையுடன் இருந்தார் ஸோயா. இதைத் தொடர்ந்து சிறுமிக்கு 2011-ல் பிரீச் கேண்டி மருத்துவமனையில் மருத்துவர் சஞ்சய் பொரூடே தலைமையில் அறுவை கிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சையை அடுத்து ஸோயாவின் வயிறு விரிவடைந்தது. உடலிலேயே மிகவும் நெகிழும் தன்மை கொண்டது வயிறுதான். முதல் அறுவைசிகிச்சைக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளை ஸோயாவின் பெற்றோர் கடைபிடிக்கவில்லை.
பொரித்த உணவுகள், இனிப்புகள் மற்றும் அக்கம்பக்கத்தார் கொடுக்கும் உணவுகளை உண்கிறார் ஸோயா. அத்துடன் பிஸியோதெரபி செய்யச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைத்ததைக் கடைபிடிக்கவில்லை. இதனால் உடல் எடை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார் ஸோயா.
ஸோயாவின் பெற்றோர், மகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர். இதுகுறித்து தாய் கூறும்போது, ”ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் ஒருமுறை ஸோயா உணவு கேட்கிறாள். வீட்டில் என்ன இருக்கிறதோ, அதைக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
இதையடுத்து இரண்டாவது முறை அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. பிரபல எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மோஹித் பந்தாரி ஸ்லீப் கேஸ்ட்ரக்டமி (வயிறு குறைப்பு அறுவை சிகிச்சை) என்னும் முறையைக் கையாண்டார். இதன் மூலம் வயிற்றின் எடை குறைக்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய பந்தாரி, ”தினசரி 2,500 கலோரி உணவை உட்கொண்டு வந்துள்ளார் ஸோயா. அதீத எடை காரணமாக ஸோயா நிற்கவோ, நடக்கவோ பழகவில்லை. தற்போது மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை மூலம் வயிற்றின் அளவு 85% குறைக்கப்பட்டுள்ளது. பசியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்புப் பகுதி நீக்கப்பட்டுள்ளது. வயிறு விரிந்துவிடாமல் தடுக்க, அதைச் சுற்றிலும் சிலிக்கன் வளையம் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மெல்ல மெல்ல ஸோயா இயல்பு நிலைக்கு வரமுடியும்” என்றார்.
நவி மும்பையில் உள்ள எம்பிசிடி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ சிகிச்சை, உணவு ஆலோசனைகள் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ பராமரிப்பையும் கவனித்துக்கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

