மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நாவலடி-கல்லடி பிரதான வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக குறித்த பகுதியினுாடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாவலடி கடல்நாச்சியம்மன் ஆலயத்தினுள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடல்கொந்தளிப்பு ஏற்படும் சமயங்களில் இலகுவில் கடல்நீர் உட்புகும் நிலையுள்ளதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இந்த வீதியை புனரமைத்து தருமாறு கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இந்த வீதியூடாக செல்லும் நீர் கிராமத்திற்குள் செல்லும் அபாயம் உள்ளதாகவும், இதன்காரணமாக கிணறுகளில் உள்ள நீர் உவர்ப்பு நீராக மாறும் நிலையேற்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சுனாமியினால் பாரிய அழிவினை சந்தித்த இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு அழிவினை சந்திக்கும் நிலைக்கு தம்மை கொண்டுசெல்ல வேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளனர்

