இந்தியாவில் பிறந்த ஈழ ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடுகடத்தியமை தொடர்பில், இந்திய வெளிநாட்டு பிராந்திய பதிவாளர் அதிகாரிக்கு, சென்னை மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஆனந்த் என்ற குறித்த ஈழ ஏதிலி தமிழகத்தின் ஏதிலி முகாமில் பிறந்து வளர்ந்தவர்.
அவர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணப்படகை மேற்கொண்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் இந்தியாவிற்கு பிரவேசித்த போது நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அவரது ஏதிலி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில், இந்திய பிறப்புப் பதிவு சான்றிதழ் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய அதிகாரிகள் சென்னை நீதிமன்றில் வாதாடினர்.
எனினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், ஏதிலி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் இருந்து ஏதிலிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவ்வாறான சூழ்நிலையில் அவர் குறித்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இது குறித்து நேரடியாக விளக்கம் வழங்குவதற்காக இந்திய வெளிநாட்டு பிராந்திய பதிவாளர் அதிகாரி அழைக்கப்பட்டுள்ளார்.

