நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற மூவர் பலியான விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளையைச் சேர்ந்த பௌஸ், சப்ராஸ், அநுராதபுரத்தைச் சேர்ந்த தில்ஷான் பலி
சாரதி போதையில்; காயமடைந்து வைத்தியசாலையில்
நள்ளிரவு 12 .10 மணியளவில், கொழும்பு – காலி வீதியில் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அருகிலும், இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகிலும், இருவேறு விபத்துகளில் 8 பேர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில், மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
விபத்தை மேற்கொண்ட சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மொஹம்மட் முர்சித் எனும் பேருவளையைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு காரை செலுத்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து காலி திசை நோக்கி பயணித்த குறித்த கார், இரத்மலானையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில், எதிர்த் திசையில் வந்த கார் ஒன்றுடனும், மேலும் இரு மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது.
மரணமடைந்தவர்கள் 18, 21, 54 ஆகிய வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மரணமடைந்தோர் விபரம்:
1. மொஹம்மட் பௌஸ் மொஹம்மட் றிஸ்வான் (54), பஞ்சாலோக்க வீதி, தெஹிவளை
2. சப்ராஸ் காதர் (21), பரகும்பா வீதி, மெதிமால, தெஹிவளை
3. தில்ஷான் குமார (18), புத்தளம் வீதி, பண்டுலுகம, அநுராதபுரம்
சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

