வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதிலாக வெளிவிவகாரச் செயலாளர்களே இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.
அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் செயற்பட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையிலேயே பிரதமர் மற்றும் அமைச்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிவிவகாரச் செயலாளர்களை வெளிநாட்டுத் தூதரகங்களில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் கொழும்பில் ஷங்ரி லா விடுதியில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்சின் 47 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில், அந்நாட்டின் தூதுவரின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார்.
அதேபோன்று ஜப்பானிய சக்தரவர்த்தி அகிஹிட்டோவின் 85 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

