ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நான் தான் தீர்மானிக்க வேண்டும். அந்தவகையில் தேர்தலை நடத்தும் எண்ணம் என்னிடம் தற்போது கிடையாது. மேலும் ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட தயார் இல்லை.
இதேவேளை, இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பில் இப்போது முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்துடன் கடந்த ஒரு மாதமாக இலங்கையில் மணித்தியால அடிப்படையில் அரசியல் நடைபெறுகிறது.
அந்தவகையில் ஒரு ஆண்டு காலத்திற்குள் என்ன நடக்கும் என்று இப்போது யார் சொல்ல முடியும்? இப்போது எதையும் நாங்கள் கூற முடியாது.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

