காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் அங்குள்ள தால் ஏரியின் கரையோரப் பகுதிகள் உறைந்து காணப்படுகின்றது.
காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாகும். இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் என வர்ணிக்கப்படுகின்றது. இத்தகைய சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதிகள் உறைந்து காணப்படுகின்றது.
உயிரை உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகின்றது. காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்துள்ளது. தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து காணப்படுவதுடன், குழாய்த்தண்ணீரும் உறைந்துள்ளது.
இந்தநிலையில்,தால் ஏரிக்கரையில் நின்று மக்கள், உறைந்துள்ள ஏரியில் கற்களையும், காகிதங்களையும் வீசி மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், குடிநீர்க்குழாயில் தண்ணீர் வராமல் குடி நீருக்கு மக்கள் அவதிப்படுகின்ற நிலையும் அங்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

