செல்வாக்குள்ள புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னரே நிதிப் பயன்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும் எனவும் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி முதல் நிதி அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே நிதிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும்.
மூன்றாவது வாரமாகவும் விகாரமாதேவி பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இருப்பினும், பொதுத்தேர்தலுக்கான நிதியினை ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யதுகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச துறைகளின் செயற்பாடுகள் அத்தனையும் ஜனவரி மாதம் முதல் ஸ்தம்பிதமடையும் நிலைமை காணப்படுவதாக கூறப்படுகின்றது. விரைவாக அரசாங்கமொன்று அமைக்கப்படுவதுதான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்பது சகலரினதும் கருத்தாகவுள்ளது.
இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாக தீர்மானம் எடுக்காமல், இழுத்தடித்து வருவதில் பல தரப்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

