நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அரசியல் மற்றும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
“வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக் கடன், சுற்றுலாத்துறையினரின் வருகை உட்பட பல்வேறு விடயங்கள் தடைப்பட்டுள்ளன. பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரையில், வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. ஜனவரி மாதத்தில் அரச செலவுகள் தொடர்பில் பிரச்சினையுள்ளது. இதுபோன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாம் சென்றிருக்கின்றேம்.
இந்த அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் அதிகார மோகமே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுத நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அரசியல் ஸ்தீரத்தன்மை இன்மையே ஆகும் என்பத்தில் இரு கருத்துக்கள் இல்லை. அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் செயற்படாதிருக்கின்றார்கள் என்பதனால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது அதன் விளக்கம் அல்ல.
எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பாரிய செலவுகள் பிரதான காரணமாகும். அந்தப் பாரிய செலவுகளில் பெரும்பங்கு இந்த மூன்று வகையான அமைச்சுக்களின் செயற்பாட்டுக்கே செல்கின்றது.
இந்த சிறிய நாட்டுக்கு மூன்று வகையான அமைச்சுக்களும், மாகாண அமைச்சுக்களும், உள்ளுராட்சி நிருவாகமும் தேவையற்றது என மல்வத்து பீட மகாநாயக்க தேரர் அண்மையில் அச்சு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரச செலவீனங்கள் அதிகரிக்கும் போது வரி அதிகரிக்கின்றது. வெளிநாட்டுக் கடன் அதிகரிக்கின்றது. இத்தனை சுமைகளையும் பொது மக்கள் மீது சுமத்தும் போது வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. இதனால், மக்கள் இயந்திரம் போன்று சமயம், கலாசாரம், குடும்பம், உறவுகள், சமூகம் என்பன மறந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய மக்கள் பணத்தின் பின்னால் நிம்மதியிழந்து தவிக்க நேரிடுகின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற எப்போது நாம் முயற்சிக்கின்றோமோ அப்போதுதான் கடன் சுமையிலிருந்து நாம் விடுபடுவோம் என்பது ஒவ்வொரு சாதாரண பாமர குடிமகனினதும் உள்ளத்திலுள்ள ஒரே வகையான நாட்டுப் பற்றாகும்.

