தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த அரசியல் தலைவர்களினால் எமது எதிர்கால சந்ததியினர் அனைவருக்கும் அடிமைகளாக்கப்படும் துர்பாக்கிய நிலை ஏற்படும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதியோர்களின் நலன் திட்டத்தில் கீழ் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ்ட பிரைஜைகள் சபையினால் முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”எதிர்காலத்தில் எமது சந்ததிகள் அனைவருக்கும் அடிமைகளாக நிற்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் நம்பி வாக்களித்த சில அரசியல் தலைவர்களின் செயற்பாடுதான்.
இனிமேலும் எம்மக்களை ஏமாற்ற முடியாது. எவ்வளவோ படுகொலை நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் நீதிமன்றம் போகாத எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் ரணிலை காப்பற்ற நீதிமன்றத்திற்கு போகின்ற கேவலமான செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை எமது இனத்தை வேகமாக அழிக்கவேண்டும் என்பது தான் பெரும்பான்மையினரின் சிந்தனை. சிங்கள மக்களுக்கு இருக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற சிந்தனை இல்லை.
உண்மையில் அப்பாவி சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தெரியாது. எனவே எங்களுடைய தமிழ் தலைவர்கள் தென்பகுதிக்கு சென்று அவ்விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

