அரசாங்கம், பிரதமர் இல்லாத நிலையில் பாராளுமன்றம் இன்று(05) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இன்றைய சபை அமர்வின் போது எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியுமான வாய்ப்பு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இலத்திரனியல் வாக்கெடுப்பின் போது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே இருந்தவாறு ஆசனங்களில் அமரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அரசியலமைப்பின் 48 ஆம் சரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பது இந்தப் பிரேரணையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பிரதமர், அரசாங்கம் என்பவற்றுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவையடுத்து நாட்டில் இப்பொழுது பிரதமரோ, அரசாங்கமோ இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரணில் விக்ரமசிங்க மீதுள்ள வெறுப்பும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிடிவாத குணமும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்துள்ள வெளிப்படையான ஒரு விடயமாகும்.

