தெற்கில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பநிலைக்குக் காரணம் தமிழ்த் ‘தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே ஆகும்.
– இவ்வாறு எரிந்து விழுந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத் கமகே.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இலங்கையின் ஆட்சிப்பீடம் ஜனாதிபதியின் ஜனநாயகவிரேத செயலால் குழப்பமடைந்து ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் தென்னிலங்கைக் குழப்பத்தின் மத்தியில் இலங்கையிலும் சர்வதேசத்தாலும் அரசியல் அவதானிகளாலும் கூர்ந்து கவனிக்கப்படுபவர்களாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள். அதிலும் முக்கிய பிரதானிகளாக அதன் தலைவர் சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் காணப்படுகின்றனர்.
இந்த நிவையில், இவர்கள் இருவர் மீதும் மஹிந்த அணியினரின் வசைபாடல் அண்மைய நாள்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன, மேஜர் ஜென்ரல் ஹமால் குணரத்தின ஆகியோர் சுமந்திரனை வசைபாடியிருந்தனர். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அளுத் கமகே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை வசைபாடியுள்ளார்.
அவரது வசைபாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
தென்னிலங்கையின் இந்த நெருக்கடிநிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவந்து தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார்கள். இதுதான் அவர்களின் திட்டமாக உள்ளது. – என்றார்.

