இலங்கையைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கூறு போட் டேனும் தமிழீழத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு வழங்கியுள்ளார் என்று சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுமக்கள் முன்னணிக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தெரிவித்தாவது,
2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தங்களை பலப்படுத்திகொண்டு மீண்டு வருவார்கள். இவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை விரட்டியடிப்பார்கள் என்று நாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாகவே கூறியிருந்தோம்.
அதற்கான ஏற்படுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நாட்டைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கூறுபோட்டேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழீழத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படுமென்ற வாக்குறுதியை ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றுத்துறையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்க நீதித்துறை தலையீடு மேற்கொண்டுள்ளது. இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பொதுத்தேர்தலை நடத்தி மக்களின் இறைமையின் அடிப்படையில் புதிய அரசுசொன்றை அமைப்பதே இதற்கெல்லாம் ஒரே தீர்வு – என்றார்.