மகிந்த ராஜபக்சவினால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று கூறியது, தேர்தல் மேடையைக் கவருவதற்கான கட்டுக்கதையே என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிலோன் ருடே ஊடகத்துக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேர்காணல் வழங்கியிருந்தார். அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக நீங்கள் திரும்பத் திரும்ப கூறி வந்தீர்கள். அப்படியிருக்கும் போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவை தலைமை அமைச்சராக நியமித்தீர்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.
“அவையெல்லாம் அரசியல் மேடைகளில் குற்றம்சாட்டப்பட்ட வெறும் அரசியல் பேச்சுக்கள். ஆனால் அண்மையது என்னைக் கொல்வதற்கான தெளிவான திட்டம் என்று அவர் பதிலளித்தார்.
அப்படியானால், ராஜபக்ச தேர்தலில் வென்றிருந்தால், நீங்களும் உங்களின் குடும்பமும், ஆறு அடி நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருப்போம் என்று தெளிவாக கூறியிருந்தீர்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், மகிந்த ராஜபக்ச என்னைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று எந்த தகவலும் இல்லை. அவை வெறுமனே தேர்தல் மேடைகளில் அங்கிருப்பவர்களைக் கவருவதற்காக கூறியவை என்று பதிலளித்துள்ளார். அது மட்டுமல்லாது பதிலைக் கூறி விட்டு செவ்வி கண்ட ஊடகவியலாளரைப் பார்த்து நக்கலாக சிரித்துமுள்ளார்.
அரச தலைவர் தேர்தலின் போது, தன்னைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, குண்டுதுளைக்காத அங்கியுடன் பரப்புரை மேடைகளில் தோன்றிய மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் மகிந்த ராஜபக்சவினால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று கூறியிருந்தார்.
2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, பன்னாட்டு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில், நானும் என்னுடைய பிள்ளைகளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச தலைவர் தேர்தல் தினத்தன்று, இரவு நேரத்தில், குருநாகலவில் உள்ள எனது நண்பன் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தோம். தேர்தலில் நான் தோல்வியுற்றிருந்தால், என்னைச் சிறையிலடைப்பதற்கும் எனது குடும்பத்தினரை அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள் மாறியிருந்தால், நானும் எனது குடும்பமும், இந்நேரம் உயிரோடு இருந்திருப்போமா எனத் தெரியவில்லை. அதுதான் மகிந்தவின் ஜனநாயகம். அது எனக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் வெற்றிபெற்று, நான் தோல்வியடைந்திருந்தால், இந்த நேரம் பலர் கொல்லப்பட்டு, பலரது கைகால்கள் உடைக்கப்பட்டிருப்பதுடன் பலர் சிறைக்கும் சென்றிருப்பர், என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.