சிட்னியின் அடைமழை, இருவர் பலி மற்றும் வாகன விபத்துகள் அதிகரிப்பு
இன்று காலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சி ஒரு மாதத்துக்கான மழை வீழ்ச்சிக்கு ஒத்ததாகக் கொள்ளப்படுகிறது. இதனால் பாரிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர் மழை வீழ்ச்சியும், பலத்த இடி முழக்கமும் கூடிய கால நிலையாக இன்றைய நாள் முழுக்க இருக்கப் போகிறது.
Central NSW coast இன் Moruya இலிருந்து Newcastle வரையும் Sydney, Illawarra உள்ளடங்கலாகவும் பாதிப்பு நிலவுகிறது.
எனவே வாகனச் சாரதிகள், பொதுப் போக்குவரத்தை உபயோகிக்கும் பயணிகள் இயன்றவரை வீட்டில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று சிட்னி பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையால் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Thornleigh பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 14 வயதான சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறார். 17 வயதான பையன் வாகனமோட்டிய அந்த வாகனம் இன்னொரு வாகனத்துடன் மோதி இந்த இழப்பு நேர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை தொடர்ந்த பலத்த மழையின் போது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று பின்னேரம் State Emergency Service இன் தன்னார்வலர் ஒருவரும் இந்த இயற்கை அனர்த்தத்தால் கொல்லப்பட்டிருக்கிறார் என்று அறிய வந்துள்ளது. வீதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம், மற்றும் நீர்ச்சறுக்கலால் இதுவரை 50 க்கு மேற்பட்ட வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. NSW Police’s highway patrol chief Michael Corboy இது பற்றிக் குறிப்பிடுகையில் தன் வாழ் நாளில் சந்தித்திருக்காத மிக மோசமான வீதிச் சீர்கேடு இதுவெனச் சொல்லியிருக்கிறார். வாகனச் சாரதிகள் தன் பயணங்களைத் தொடர்ந்தும் மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறார்.
மரங்கள் முறிந்தும், விழுந்தும் ஏற்படப் போகும் அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Town Hall இல் அமைந்துள்ள Woolworths பல்லங்காடி வெள்ளம் சூழ்ந்ததால் மூடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல பொது இடங்களும் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்தில் ஐம்பது விமான சேவைகள் இதுவரை இடை நிறுத்தப்பட்டும், தாமதிக்கப்பட்டும் வைக்கப்பட்டுள்ளன.
1984 ஆம் ஆண்டுக்குப் பின் இத்தகு பாரிய மழை வீழ்ச்சியுடன் கூடிய இயற்கை அனர்த்தத்தைச் சிட்னிப் பிராந்தியம் சந்திக்கிறது.