அமெரிக்காவின் புகழ்பெற்ற சில்லறை விற்பனை நிறுவனமான சியர்ஸ் திவாலானதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. சியர்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 1893-ம் ஆண்டு துவக்கப்பட்டது. நூறாண்டு கடந்த இந்நிறுவனம் அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 3,000 சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வந்தது. வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வாகனங்கள், உடைகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்று வந்தது. 1980க்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனைக் கடை என்கிற நிலையில் இருந்தது.
ஆனால் இன்றைய தலைமுறை பெரிதும் கவர்ந்த அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் வரவால் கடந்த 2011 முதல் தொடர்ந்து இழப்பைச் சந்தித்தது சியர்ஸ். 90,000 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.37ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தற்போது சிக்கி தத்தளித்து வருகிறது. இதனால் திவாலானதாக அறிவிக்கவும், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரியும் சியர்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.