நீதித்துறை வரலாற்றில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழேயே முதற்தடவையாக சேவை மூப்பு அடிப்படையில் பிரதம நீதியரசர் பதவிக்கு பெயர் முன்மொழியப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தால் கடந்த முப்பது வருடங்களாக நீதித்துறை சேவையில் பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டபோதும் சேவை மூப்பு அடிப்படையில் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பதையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இம் முறை தான் முன்மொழிந்துள்ள பிரதம நீதியரசர், 38 வருடங்களும் 11 மாதங்களும் நீதித்துறையில் சேவையாற்றி வந்தவரென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் வட்டார வன அலுவலகங்களுக்கான உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வும் நேற்று (12) பத்தரமுல்ல, அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் வன வளத்தை அதிகரித்து தேசிய அபிவிருத்தி இலக்கை நோக்கி பயணிப்பதற்கு சகல அரசாங்க அதிகாரிகளும் தங்களது பொறுப்புகளை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். வன வளத்தையும் சுற்றாடலையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் உறுதி மொழிகளை பேணி நடப்பதற்கும் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுற்றாடலை பாதுகாப்பதற்கும் வன வளத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை உரிய இலக்குகளை நோக்கி கொண்டு செல்வதற்கு நியமனம் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர் என தான் நம்புவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மிகவும் குறைந்த மட்டத்தில் சுமார் 2 வீதமேயுள்ள கம்பஹா மாவட்டத்தின் வன வளத்தை அதிகரிப்பதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றின் அவசியம் பற்றியும் விளக்கினார்.
நல்லாட்சி அரசாங்க எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் போதும் பதவியொன்றிற்கு நியமனம் வழங்குகின்றபோதும் பாரபட்சமின்றி அதனை மேற்கொள்ளுமாறு தான் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
30 – 32 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகவுள்ள அரசாங்க சேவையின் வினைத்திறனை மேம்படுத்தி நாட்டின் எதிர்காலத்திற்கான சவால்களை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.
வட்டார வன அதிகாரிகள், வன பரம்பல் அதிகாரிகள் மற்றும் வன கள உதவியாளர்கள் என வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 310 க்கும் மேற்பட்ட நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றில் சில நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கினார். வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் வட்டார வன அலுவலகங்களுக்கான உற்பத்தித்திறன் விருதுகளையும் ஜனாதிபதி வழங்கினார். சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் சாந்த விஜேரத்ன, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் அநுர சதுருசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.