1977ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் போராடாமல் பாரிய தவறிழைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அன்று சகலரும் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சியைப் பெற்றிருக்க முடியும். அதேநேரம், பாரிய இழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தியால் இந்தியர்கள் அனைவரையும் ஒரே நாட்டவர்கள் என்ற உணர்வுடன் இணைக்க முடிந்தது. சகலரையும் ஒன்றிணைத்து அவர் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டங்களாலேயே ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டு வெளியேறியிருந்தனர் என்றார்.
1977ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு பெரும் எண்ணிக்கையான தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். ஒரு ஆசனத்தைத் தவிர சகல ஆசனங்களையும் நாம் கைப்பற்றியிருந்தோம். அன்று நாம் அரசாங்கத்துக்கு எதிராகவும் சட்டமறுப்புக்களுக்கு எதிராகவும் காந்திய வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். அவ்வாறு அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சுயாட்சியைப் பெற்றிருக்க முடியும் என்பதுடன் பாரிய வன்முறைகளுக்கும் முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும். அன்று நாம் பாரிய தவறிழைத்துவிட்டோம் எனவும் கூறினார்.
நாட்டில் வன்முறைகள் ஏற்படாது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வை வழங்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்கள் அதற்கு எதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.