கூட்டரசாங்கத்திலிருந்து விலகுமாறு ஸ்ரீ ல.சு. கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு முன்வைத்துள்ள பிரேரணையை உடன் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதன் பிறகும் இணைந்திருப்பதனால், கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் இதனால், அரசாங்கத்திலிருந்து விலகி முற்போக்கு சக்திகளுடன் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்வர வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அக்குழு கூறியுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து காத்திரமான தீர்மானமொன்றுக்கு வருமாறும் ஜனாதிபதியைக் கோரவுள்ளதாகவும் அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.