சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் கிடு,கிடு பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்ததில், ஈரோட்டை சேர்ந்த தோல் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை உள்ளது.
தமிழகம் -கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் மழை பெய்தது.
நேற்று மதியம் முதல் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றன.
நேற்றிரவு 8 மணியளவில் மைசூரிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. கெஞ்சனூரை சேர்ந்த டிரைவர் கவுதம்(29) பஸ்சை ஓட்டினார்.
கர்நாடகா நஞ்சன்கூட்டை சேர்ந்த ராஜூ(50) கண்டக்டராக இருந்தார். இதுதவிர, பஸ்சில் 24 பயணிகள் இருந்தனர்.
பஸ் 25 மற்றும் 26வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே வந்தபோது, பனி மூட்டத்தால் நிலை தடுமாறி சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு கிடுகிடு பள்ளத்தில் பாய்ந்தது.
100 அடி தூரம் வரை சென்ற பஸ் மரத்தில் மோதி நின்றது. தகவலறிந்த ஆசனூர் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த தோல் வியாபாரிகள் முத்தான்(65), மாமரத்துபாளையத்தை சேர்ந்த குருசாமி(55) ஆகியோர் உடல்நசுங்கி பலியாகினர். காயமடைந்த 24 பேரும் மீட்கப்பட்டு கோபி, சத்தியமங்கலம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்தில் பலியான முத்தான், குருசாமி மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த தோல் வியாபாரி பூர்ணசாமி(39) ஆகியோர் வேலை விஷயமாக மைசூருக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஆசனூர் வந்தபோது கார் பழுதாகிவிட்டது. இதையடுத்து, காரை மெக்கானிக்கிடம் ஒப்படைத்து விட்டு, 3 பேரும் தனியார் பஸ்சில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
பஸ் சுமார் 7 கிமீ தூரம் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி முத்தானும், குருசாமியும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
பூர்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

