நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரவி கருணாநாயக்க இந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சராகவும், தயாசிறி ஜயசேகர இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்து பதவி விலகியவர்கள் ஆவார்கள். மத்திய வங்கி பிணை முறி மோசடியைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க பதவி விலகினார். தயாசிறி ஜயசேகர தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறி 16 பேருடன் இணைந்து கொண்டதனால், பதவி விலகினார்.
இதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் புதிய செயலாளர்களை நியமித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சு என்பவற்றை பிரித்து எடுத்து புதிய அமைச்சொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், இருக்கின்ற அமைச்சுக்களை குறைப்பதற்குப் பகரமாக இன்னும் அமைச்சுக்களைக் கூட்டி அதற்கு அமைச்சர்களை நியமித்து, அதற்கான நிருவாக செலவுகளை அதிகப்படுத்துவது சிறந்த பணியல்ல என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர் என்பது பொதுவான உண்மையாகும்.