காட்டுயானைகள் ரயில் மார்க்கத்தில் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்சை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களினால் இந்த சமிக்ஞை கட்டமைப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு மாதிரித்திட்டமாக எதிர்வரும் வாரத்துக்குள் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் மார்க்கங்களில் காட்டுயானைகள் பிரவேசிப்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் காட்டுயானைகளால் ஏற்படும் மரணங்களில் 10 வீதமானவை ரயில் மார்க்க விபத்துக்களிலேயே இடம்பெறுவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பளுகஸ்வெவ – புவக்பிட்டிய பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற ரயிலில் மோதுண்டு 4 காட்டுயானைகள் விபத்துக்குள்ளாகியதையடுத்து, இரத்து செய்யப்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு ரயில் மார்க்கம் இன்றும் வழமைக்கு கொண்டுவரப்படவில்லை.
காட்டுயானைகள் மோதியதால் தடம்புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டைக்கான ரயில் போக்குவரத்து கல் – ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலன்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் இடைக்கால அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

