அதிகளவு கடன் மோசடியில் ஈடுபட்டோரின் பட்டியல் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற குழுவுக்கு ரகுராம் ராஜன் அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற குழுவுக்கு ரகுராம் ராஜன் அனுப்பியுள்ள அறிக்கையில்,‘‘அதிக நம்பிக்கை கொண்ட வங்கியாளர்கள், அரசாங்கம், தாமத வளர்ச்சி போன்ற காரணங்களால் தான் வராக்கடன் அதிகரித்துள்ளது. அரசு பொதுத் துறை வங்கிகளில் முறைகேட்டின் அளவு அதிகரித்துள்ளது.
நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது முறைகேடுகளை கண்காணிக்க தனி மையம் அமைக்கப்பட்டது. விசாரணை முகமைகளுக்கு முன்பாகவே முறைகேடு குறித்து விசாரிக்கும் வகையில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது. அதிக முறைகேட்டில் ஈடுபட்டோர் அடங்கிய பட்டியல் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் இதன் மீது எவ்வித முன்நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இந்த பிரச்னையை தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். அதிக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பு பொறுப்பாளர் சுர்ஜிவாலா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த 2016ம் ஆண்டு கடன் மோசடி நபர்கள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதன் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.