“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலங்களைக் கையகப்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திணைக்களம் ஊடாக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் சுட்டிக்காட்டினேன்” என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
ஜனாதிபதியை நேற்று மாலை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்த விடயம் பேசப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரைவாசிப் பிரதேசம் மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட செயலகம் அமைந்துள்ள பிரதேசம் மகாவலி அதிகார சபையின் கீழ் சென்றுள்ளது. 1085ஆம் ஆண முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்று கூறப்பட்டது. இன்று வரை ஒரு சொட்டு மகாவலி நீர் கூட முல்லைத்தீவுக்கு வரவில்லை. அதை அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அங்கு நீர் வந்தால் ஏற்படும் நன்மைகளை விட அங்கு ஏற்படும் சிங்களக் குடியேற்றங்களை நினைத்து அந்த மக்கள் அச்சப்படுகின்றனர்.
30 ஆண்டுகளில் பெரும்பதி நிலம் சிங்கள் குடியேற்றத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் என்று கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. மகாவலி அதிகார சபை ஒரு தமிழனுக்குக் காணி அனுமதிப் பத்திரம் வழங்கியது என்றும் நாம் இதுவரை அறியவில்லை.
வன ஜீவராசிகள் திணைக்களம் ஒரு பக்கத்தால் தமிழரின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தொல்லியல் திணைக்களமும் அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு, கொக்குளாயில் உள்ள பிள்ளையார் ஆலயம் தொல்லியல் என்றது, பின்னர் அங்கே விகாரை அமைக்கப்படுகின்றது. மன்னார், திருக்கேதீஸ்வரம் தொல்லியல் என்றனர், அங்கு விகாரை அமைக்கப்படுகின்றது. தற்போது வவுனியா, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதி தொல்லியல் என்கிறார்கள். அங்கும் விகாரைதான் அமைக்கப்படும்.
நாம் விகாரைக்கு எதிரானவர்களோ அல்லது நாட்டில் அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிரானவர்களோ அல்லர். ஒரு பௌத்தன் கூட வாழாத எமது பிரதேசத்தை ஆக்கிரமித்து விகாரை அமைப்பதையே எதிர்க்கின்றோம். நாம் உங்களிடம் இது தொடர்பில் கூறினால், அதிகாரிகளிம் கூறக் சொல்கின்றீர்கள், அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் உங்களைக் கைகாட்டுகின்றனர். இதுதான் நீண்ட நாட்களாக நடக்கின்றது.
நாம் இது தொடர்பில் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது. இவற்றை மக்கள் முன் பகிரங்கமாகக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் அது போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும் என்று ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் சுட்டிக்காட்டினேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சரை அழைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்” – என்றார்.

