முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அதன்படி இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மன்மூன் ஹுசைன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த இம்ரான் கான், தற்போது முதல் முறையாக அரசின் உயரிய பதவியை பொறுப்பேற்றுள்ளார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில், மறுதினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, 116 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இம்ரான்கான் கட்சி உருவெடுத்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மொத்தம் 342 உறுப்பினர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர் பலம் தேவை என்பதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் இம்ரான்கான்.
ஆட்சியமைப்பதற்கான உரிமை சட்டமூலம் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினால் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 176 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
