நீலகிரியில் பெய்து வரும் மழையால் பசுந்தேயிலை பறிப்பு பாதிக்கப்பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தியும், வரத்தும், விற்பனையும் 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடி நடக்கிறது. இங்கு அன்றாடம் பறிக்கப்படும் பசுந்தேயிலை, அங்குள்ள தொழிற்சாலைகளில் தேயிலைத்தூளாக உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் மற்றும் கோவையிலுள்ள தேயிலை வர்த்தக மையங்களில் வாரம்தோறும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் செல்கிறது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் கோவை வர்த்தக மையத்தில் வாரம்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு 4.50 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பசுந்தேயிலை பறிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலைத்தூள் உற்பத்தியும், வரத்தும் 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவை தேயிலை வர்த்தக மையத்தின் செயலாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது: கடந்த ஜூலை 25ம் தேதி வரை வாரம் தோறும் சராசரியாக 4.50 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. பின்னர் நேற்று வரை கடந்த 3 வாரமாக வாரம் தோறும் சராசரியாக 3 லட்சம் கிலோ மட்டுமே வருகிறது. வரத்து 35 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இம்மாதத்தில் வாரம் தோறும் சராசரியாக 5 லட்சம் கிலோ தேயிலைத்தூள் வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு, இம்மாதம் வரத்து குறைந்துள்ளதற்கு கடந்த ஒரு மாதமாக தேயிலை சாகுபடி பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாகியுள்ளது. வரத்து குறைவால் விலை கிலோவிற்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது என்றார்.
