மழை வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கோவையில் ₹350 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. கேரளாவில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கிறது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தமிழகம் மற்றும் வட மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் சரக்கு லாரிகள் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோவையில் ₹350 கோடி மதிப்பிலான சரக்குகள் முடங்கின. கோவையில் இருந்து தினசரி 500 லாரிகள் உள்பட, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 2,500க்கு மேற்பட்ட சரக்கு லாரிகள் கேரளா செல்கிறது. இதில் கோவை அருகேயுள்ள வாளையார், வேலந்தாவளம் வழியாக அதிகளவில் லாரிகள் செல்கிறது.
இது தவிர பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகேயுள்ள கோபாலபுரம், கோவிந்தாபுரம், கிணத்துக்கடவு அருகேயுள்ள நடுப்புணி, கோவை அடுத்த ஆனைகட்டி அருகேயுள்ள மன்னார்காடு வழியாகவும் லாரிகள் கேரளா சென்று வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால் அணைகளுகு நீர் வரத்து அதிகரித்து, அவை நிரம்பி மாநிலத்தின் பெரும்பகுதி மாவட்டங்களை மூழ்கடித்து வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒரு வாரமாக வாளையார் மற்றும் வேலந்தாவளம் உள்ளிட்ட பல்வேறு வழியாக தமிழக, வட மாநில சரக்கு லாரிகள் கேரளா செல்லவில்லை. வட மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள் அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா சென்ற சரக்கு லாரிகள் திரும்ப முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது: ‘கேரளாவிற்கு சரக்கு லாரிகள் செல்லாததால் தினசரி ₹50 கோடி என கடந்த ஒரு வாரத்தில் ₹350 கோடி மதிப்பிலான சரக்குகள் கோவையில் தேக்கமடைந்துள்ளது. கிரைண்டர், பம்ப்செட் உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள், இரும்பு, தென்னை நார், காய்கறிகள், பூக்கள், கட்டுமான பொருட்கள், ஓணம் பண்டிகைக்கான ஜவுளிகள் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. வரும் நாட்களில் மழை ஓய்ந்து, சாலை போக்குவரத்து சீரான பின்னர் தேக்கமடைந்துள்ள சரக்குகள் படிப்படியாக செல்லும், என்று எதிர்பார்க்கிறோம்.’ இவ்வாறு கலியபெருமாள் கூறினார்.

