வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அதிரடி செயற்பாட்டினால், பல காலமாக பொலனறுவை, அங்கம்மெடில்லை தேசிய பூங்காவிற்குள் புதையல் தோண்டி வந்த அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.
பிரதியமைச்சர் நேற்று (வியாழக்கிழமை) இரவு அங்கு விஜயம் செய்திருந்த நிலையில், இதன்போது இரு வனஜீவராசிகள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு தொலைப்பேசி அழைப்பொன்றை ஏற்படுத்திய நபரொருவர், அங்கம்மெடில்லை தேசிய பூங்காவிற்குள் புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளருக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரதியமைச்சர், இது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளார்.
பிரதியமைச்சரின் பணிப்புரைக்கமைய வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், கிரிதலே வனஜீவராசிகள் திணைக்களத்திலிருந்து அங்கம்மெடில்லை தேசிய பூங்காவிற்கு குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால், பிரதியமைச்சர் குறிப்பிட்டது போன்று தேசிய பூங்காவிற்குள் அவ்வாறான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஹிங்குரன்கொட பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதியமைச்சர் நேற்றிரவு தேசிய பூங்காவிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டுளளார்.
இரவு 10 மணியளவில் இச்சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் காட்டுப் பகுதிக்குள் முகாமிட்டிருந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் இரு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வர்த்தகர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள், மாணிக்கக்கல் அகழ்வோர் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த பகுதியிலிருந்து கார், வான் மற்றும் கெப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கெப் வண்டியினுள் இருந்து ஒக்சீசன் சிலிண்டர்கள் மற்றும் அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

