அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நாட்டு மக்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி உலகிற்கு எடுத்துக் காட்டுவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். இதில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை முக்கிய ஒன்றாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றரை வருட ஆட்சியில் நாடு பாரிய பின்னடைவை எட்டியுள்ளதாகவும், இனியும் இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அபிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து எதிர்கருத்துள்ள அரசியல் தரப்பினரை பழிவாங்கும் நடவடிக்கையை மாத்திரமே இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

