2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் இவ்வருடம் நிலவிய கடும் வெப்பம் பல்வேறு சாதனைகளை முறியடித்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் அதிகூடிய வெப்பமும், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திலும் அதிகூடிய வெப்பம் இவ்வருடத்தில் பதிவாகியிருந்தது. இந்த வெப்ப அதிகரிப்பு அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்கும். 0.01°C இல் இருந்து 1°C வரை இந்த வெப்பம் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் என நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான ஒரு ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது. இந்த அதிகரிக்கும் வெப்பத்தால் பல்வேறு இயற்கை இடர்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி அதிவேகமாக வெப்பமயமாகி விடும் எனவும், கடல் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மூன்று வருடங்களிலும் (2015 இல் இருந்து…) அடுத்தடுத்த வருடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகின்றமையும் இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தற்போது வரை 2022 ஆம் ஆண்டு வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும், சிலவேளைகளில் இது மேலும் சில வருடங்கள் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
