தென் சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற 5.0 ரிச்டர் பரிமாணத்திலான நிலநடுக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 7 கிலோமீற்றர் ஆழத்திலும், 24.19 பாகை வடக்கு அட்சரேகை மற்றும் 102.71 பாகை தீர்க்கரேகை பகுதியில் நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாகவும், அதிகாலை 1.44 அளவில் முதலாவது அதிர்வு உணரப்பட்டதாகவும் சீனாவின் நிலநடுக்க ஆய்வு தொடர்பாடல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சிஜி நகரத்தை அண்மித்த தொங்காய் கவுண்டியின் யுங்ஷி நகரத்தில் உள்ள சில கட்டிடங்களுக்கு பாதிப்பட்டதுடன், அதில் தங்கியிருந்த 5 பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்த அனர்த்தத்தில் குறைந்தது 18 வீடுகள் வரை பகுதியளவிலும், முற்றாகவும் சேதமடைந்தன. அத்துடன், பிரதேசத்திற்கான மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர உதவி சேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாகாண நிலநடுக்க மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தமது அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனர்த்த மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

