பாகிஸ்தானின் அதிநவீன கடற்பாதுகாப்பு கப்பல் நான்கு நாள் நல்லெண்ண பயணம் நிமித்தம் இம்மாதம் இலங்கை வரவுள்ளது.
பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பலான பி.எம்.எஸ்.எஸ் ‘காஸ்மீர்’ என்ற கப்பலே, இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் குறித்த காலப்பகுதியில் பி.எம்.எஸ்.எஸ் ‘காஸ்மீர்’ இலங்கை கடற்படையுடன் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகளில் பங்குபற்றவுள்ளது
பி.எம்.எஸ்.எஸ் காஸ்மீர், 94 மீட்டர் எம்விபியுடன் 1550 தொன் நீரினை இடம்பெயர்க்கின்ற வல்லமையுடையது. பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள், தொடர்பாடல் மற்றும் திசைக்காட்டி உபகரணங்களை கொண்டுள்ளது. இரு டீசல் இயந்திரங்களால் 35000 கடல் மைல் வரை பிரயாணம் செய்யவும், 26 நௌட்ஸ் அதிகபட்ச வேகத்தில் இயங்கக்கூடியதுமாகும்.
இக்கப்பலானது வானூர்தி மற்றும் எரி பொருள் நிரப்பும் வசதிகளை கொண்டுள்ளமையினால் சுயாதீனமாக அல்லது பன்முக அச்சுறுத்தல் சூழலில் அதிரடிப்படையாக கண்காணிப்பு, சீராக்கல், கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கை, சட்டவிரோத மீன்பிடி எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கல், கடற்பாதுகாப்பு, கடற் மாசுபடுதலினை கண்காணித்தல், கட்டுப்படுத்தல், ஆய்வு மற்றும் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தக்கவகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

