ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கலுக்கான நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை நெற்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாயிகளின் 165 ஏக்கர் வயல் நிலம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது. இதற்கு மாற்றீடாக அதே பகுதியில் காணப்பட்ட கைவிடப்பட்ட குளங்கள் இரண்டு புனரமைக்கப்பட்டு அதன் கீழாக வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
எனினும் வயல் நிலங்கள் கையளிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக குளங்களுக்கு போதிய நீர் வரவில்லை. ஏற்கனவே விவசாய அமைப்புகளுடன் செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் புனரமைக்கப்பட்ட குளங்களுக்கான நீர்வரத்து தொடர்பில் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
மழை காலங்களில் மேற்படி அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மேலதிக நீரானது ஆற்றில் பாய்ந்து கடலில் கலக்கின்றது. எனவே அணைக்கட்டிலிருந்து சுலுசு மற்றும் கால்வாய் அமைப்பதினூடாக புனரமைக்கப்பட்ட குளங்களின் நீர்வரத்தினை அதிகரிக்க முடியும். இதனால் விவசாயிகள் பிரச்சனைகளின்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்.
இதுதொடர்பில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் என்னால் கொண்டு வரப்பட்ட பிரேரணை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நீர்வழங்கல் வடிகாலமைப்பச் சபை அனுமதிக்குமிடத்து வேலையை செய்வதற்கு தயாராக இருப்பதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே விவசாயிகளின் நன்மை கருதி மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
