அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனுக்கு வெளிச்சுற்றுக்கு மிக அருகில் விண்கலம் ஒன்றை செலுத்த உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுருக்கமாக நாசா (NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பூமிக்கு அருகில் உள்ள பல கிரகங்களை ஆராய விண்கலங்களை செலுத்தி உள்ள நாசா தற்போது சூரியனைப் பற்றி ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியை ஒட்டி பார்கர் சோலார் பிரோப் என்னும் விண்கலத்தை நாசா தயாரித்துள்ளது.
இந்த விண்கலம் 1500 கோடி அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 11 ஆம் தேதி இந்த விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்துகிறது. இந்த விண்கலம் சூரியனின் வெளிச்சுற்றுக்கு மிக அருகில் பயணம் செய்ய உள்ளது. இதுவரை சூரியனுக்கு அணுப்பப்பட்ட விண்கலன்களிலேயே சூரியனுக்கு மிக அருகில் பயணம் செய்வது இந்த விண்கலமாக இருக்கும்.
சூரியன் என்பது ஒரு நெருப்புக் கோளம் என்பதால் இந்த விண்கலம் அந்த வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூரியனின் மிக அருகில் செல்ல சுமார் 7 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இந்த விண்கலத்தின் மூலம் விண்வெளி காற்றின் வேகம், சூரியனின் மேற்பரப்பு குறித்த தகவல்களை அளிக்க உள்ளது.
இந்த விண்கலத்தின் மூலம் பூமியில் ஏற்படும் விண்வெளி சுற்றுச் சூழல் மாறுதல்களை முன்கூட்டியே அறிய முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

