Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து மு க ஸ்டாலின் கடிதம்

August 9, 2018
in News, Politics, World
0

கருணாநிதியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மு க ஸ்டாலின் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு க ஸ்டாலின் நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நேற்று மாலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். அத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்களும் ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதற்கு நன்றி தெரிவித்து கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம்.

ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞரை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும் நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம். தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த தலைவர் கலைஞர் திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர். அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்-அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞரின் உயிர் காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை-ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான தலைவர் கலைஞர், தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவருக்கு இடம் ஒதுக்கக் கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அதிமுக அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

பேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கலைஞர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கலைஞர் நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய திமுக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்த திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த திமுக சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞரின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை – ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தலைவர் கலைஞருக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது ‘கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை’ சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. தலைவர் கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக சோதனையான காலகட்டத்தில் தலைவர் கலைஞரின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே, தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாகனங்களில் வந்ததால் ஓய்வு இல்லாமல் தவிக்கும் உடன்பிறப்புகள் இன்று இரவு சென்னையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு நாளை காலை புறப்பட்டுச் செல்லலாம். தூக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தலைவர் கலைஞரைப் பார்த்து விட்டுச் செல்லும் ஒவ்வொரு உடன்பிறப்பும் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி கடைசி உடன்பிறப்பிடமிருந்தும் கிடைத்த பிறகுதான் உங்களில் ஒருவனான நான் உறங்கச் செல்வேன் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கலைஞரின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Previous Post

மே 17 திருமுருகன் காந்தி கைது

Next Post

மன்னார் சதொச வளாக புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

Next Post

மன்னார் சதொச வளாக புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures