நேற்று செவ்வாய்க்கிழமை Normandie நகரில் இடம்பெற்ற கடும்மழை மற்றும் மிக மோசமான மின்னல் தாக்குதலினால் தொடரூந்து போக்குவரத்து தடைப்பட்டது. 1500 பயணிகள் வரை தொடரூந்து நிலையத்தில் தரித்து நின்றனர்.
செவ்வாய்க்கிழமை பகல் நீடித்த கடும் வெப்பம் மாலையில் அடைமழையாக தொடர்ந்தது. பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை இடி மின்னல்களுடன் பெய்திருந்தது. குறிப்பாக Normandie மாவட்டம் மிக மோசமான மின்னல் தாக்குதல்களை சந்தித்திருந்தது. இதனால் சிலமணி நேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இங்குள்ள Lisieux, Caen மற்றும் Evreux ஆகிய நிலையங்களில் தொடரூந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் நிலையத்துக்குள் குவிய ஆரம்பித்தனர். 1,500 பயணிகள் வரை தொடரூந்து நிலையத்துக்குள் நிறைந்து நின்றனர். தவிர, தொடரூந்து தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்தும் சேவையை தடைப்படுத்தியதாக SNCF அறிவித்துள்ளது.
நள்ளிரவு தாண்டியும் இந்த சேவை தடைப்பட்டது. பாதைகளை சீராக்கும் அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு Normandie இல் இருந்து பரிசுக்கு அதிகாலை 2.30 மணிக்கு தொடரூந்து இயக்கப்பட்டது. ஏனைய சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பயணிகளில் சிலர் அருகில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து இன்று காலை பயணத்தை தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
