கருணாநிதியின் தவறுகள் மற்றும் சாதனைகளில் இருந்து பாடம் கற்கிறேன் என்று மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவால் நேற்று மறைந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“நான், கருணாநிதியை அரசியல்வாதியாக அறிவதற்கு முன்னால், எழுத்தாளராக அறிந்திருந்தேன். அவர், எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்தார். பல நடிகர்களுக்கும் அவர் தமிழ் ஆசிரியராக இருந்தார். நாங்கள் (நடிகர்கள்) கருணாநிதியின் மொழியைப் பயன்படுத்தினோம். சிவாஜி கணேசனின் குரலைப் பயன்படுத்தினோம். கண்ணதாசனிடமிருந்து சொற்களைக் கற்றுக்கொண்டோம். இந்த மூன்று பேரும் பல நடிகர்களுக்கு தமிழ் ஆசிரியர்களாக விளங்கினார்கள்.. அந்த மூன்று ஆசிரியர்களும் தற்போது நம்முடன் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக, கருணாநிதி தமிழக அரசியலில் ஊடுருவி இருந்தார்” என்று கமல் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியலில் யாருமே தவறிழைக்காதவர்கள் கிடையாது. அவருடைய தவறுகளிலிருந்தும் நான் பாடங்களைக் கற்கிறேன். அவருடைய சாதனைகளிலிருந்தும் பாடங்களைக் கற்கிறேன்.
மிகப்பெரும் கட்சியாக இருந்த, மிகப்பெரிய பின்னணி கொண்ட சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற, காந்தி என்ற ஆளுமையைப் பின்புலமாகக் கொண்ட காங்கிரஸுக்கு எதிராக மோதி வெற்றிபெற்றது தி.மு.க.வின் சாதனையாகும். தி.மு.கவினர் சினிமாவைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். ரஷ்யாவும், ஜெர்மனியும் அதை முயற்சி செய்தார்கள். ஒரு மாநிலக் கட்சியாக அதைச் சாதித்துக் காட்டியது தி.மு.க’ என்று கமல் தெரிவித்தார்.