வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை மீள ஒப்படைக்கக் கூடாது என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் நுழைந்து நவீன முறைகளைக் கையாண்டு எமது கடல் வளத்தைச் சூறையாடுகின்றார்கள்.இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. இதை அறிந்து கொண்டும் இலங்கை அரசு இந்திய மீனவர்களின் படகுகள், வலைகளை ஒப்படைப்பதுடன், சாதாரணமாக அவர்களை விடுதலையும் செய்கின்றது.
எமது கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்டுப் பறிமுதல் செய்யும் படகுகள், வலைகளை மீள ஒப்படைக்கக் கூடாது. – என்றார்.
வடக்கு முதல்வரின் இந்தக் கருத்தைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனையோரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் சிறப்புத் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
