வடக்கு அமைச்சர் சபையில் புதிய குழப்பம் தோன்றியுள்ளது. அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அவர்களது பணியாள் தொகுதிக்கான சம்பளம் என்பவற்றை வழங்கலாமா எனக் கேட்டு, அமைச்சுக்களின் செயலர்கள் வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வடக்கு மாகாண அமைச்சர் சபையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளையை வழங்கிய மன்று, பா.டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்று குறிப்பிட்டிருந்தது.
டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்வதால் அமைச்சர் சபையில் 6 பேர் உள்ளனர். அரசமைப்புக்கு அமைவாக 5பேர் மாத்திரமே அமைச்சர்களாகப் பதவிவகிக்க முடியும். டெனீஸ்வரனையும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு மன்று பணித்தது.வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு முதலமைச்சரிடம், அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைச்சர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கோரியிருந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் இதுவரையில் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை. தனக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. ஆளுநர் விட்ட தவறை அவரே சரியவேண்டும். இவ்வாறு தெரிவித்து வடக்கு முதலமைச்சர், அமைச்சர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை.
அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறாத நிலையில், அமைச்சர் சபையின் கூட்டம் இரண்டு மாதங்களாகக் கூட்டப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சட்டவாக்க, நிறைவேற்றுச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளன.
அமைச்சர் சபை மறுசீரமைக்கப்படாத நிலையில், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியுமா என்று அமைச்சுக்களின் செயலர்கள் வடக்கு ஆளுநரிடம் கோரியுள்ளனர்.
ஆளுநர், சட்டஏற்பாடுகளை மாத்திரம் குறிப்பிட்டு அமைச்சுச் செயலர்களுக்குப் பதில் வழங்கியுள்ளார். சம்பளத்தை வழங்க முடியுமா? இல்லையா என்பதற்கு அந்தக் கடிதத்தில் நேரடியாகப் பதில் தெரிவிக்கவில்லை. இது அமைச்சுச் செயலர்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

