பொலிஸ் உந்துருளியுடன் மோதிக் காயமடைந்த நிலையில், பொலிஸார் சப்பாத்துக் கால்களால் தாக்கியதாகத் தெரிவித்து 18 வயது இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் கொக்குவில் பொற்பதியில் நேற்று மாலை 6.20 மணியளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த எ.டெனிஸ்ரன் (வயது-18) என்ற இளைஞனே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
பொற்பதி அரசடி வீதியைச் சேர்ந்த இளைஞன் உந்துருளியில், இளைஞனை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துள்ளார்.பின்னால் இருந்தவர் தலைக்கவசம் அணியவில்லை. அந்த வீதிக்கு குறுக்காக மூன்று உந்துருளிகளில், சிவில் உடை அணிந்த இரண்டு பொலிஸார் உள்ளிட்ட 6 பொலிஸார் நின்றுள்ளனர். இளைஞர்கள் தப்பி ஓட முற்படுகின்றார்கள் என்று கருதிய பொலிஸார், தமது உந்துருளியை நகர்த்த முற்பட்டனர்.
உந்துருளியைச் செலுத்தி வந்த இளைஞன், பொலிஸாரின் உந்துருளியுடன் மோதிக் காயமடைந்தான். இளைஞனின் கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த இளைஞனை பொலிஸார் சப்பாத்துக் கால்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
விபத்தினாலும், தாக்குதலினாலும் காயமடைந்ததாகத் தெரிவித்து இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

